திருமுருகாற்றுப்படை - பொருட்சுருக்கம்

 திருமுருகாற்றுப்படைபொருட்சுருக்கம்

 

முருகனின் பெருமை

உலகில் உள்ள உயிர்களெல்லாம் மகிழும்படி வலமாக எழுந்து வானத்தில் உலாவும் பலரும் புகழும் கதிரவன் கடலின்மேல் எழும்போது கண்டாற்போல, இடையீடு இல்லாமல் தொலைவிலிருந்து ஒளியோடு விளங்குபவன் முருகன். அவன் தன்னை அடைந்தவர்களைக் காக்கின்ற வலிய திருவடிகளை உடையவன்; பகைவரை அழித்த இடியை ஒத்த  பெரிய கையினை உடையவன்; குற்றமற்ற கற்பினையும் ஒளியுடைய நெற்றியையுமுடைய தெய்வயானைக்குக் கணவன்.  கடல் நீரை முகந்த நிறைந்த கருப்பத்தை உடைய கரிய  மேகங்கள், ஞாயிறும் திங்களும் ஒளிவீசும் வானத்தில் பெரிய மழைத்துளிகளைச் சிதறி, முதல்மழை பொழிந்த நறுமணமுள்ள  காட்டில், இருள் உண்டாகுமாறு செழித்து வளர்ந்த பெரிய அடிமரத்தை உடைய  செங்கடம்பின் தேர்ச்சக்கரம் போன்ற  பூவால் செய்யப்பட்ட  குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவன் முருகன்.

தெய்வமகளிர்

பெரிய மூங்கில் வானத்தைத் தொடும்படி மலையில் வளரும். அங்குத் தெய்வ மகளிர் இருப்பார்கள். அவர்கள் தங்கள் சிறிய பாதங்களில் சதங்கைகளை அணிந்திருப்பர். அவர்களின் கால்கள் திரட்சி உடையன; இடை வளைந்து அசையும் தன்மை உடையது; தோள்கள் பெருமையுடையவை. அவர்கள் அணிந்திருக்கும் மென்மையான ஆடை தம்பலப்பூச்சியை போல் சிவந்த நிறமுடையது. அவர்கள் தங்கள் இடையில் பல மணிகளைக் கோத்த வடங்களை அணிந்திருப்பர்; அவர்களுடைய அழகு கையால் ஒப்பனை செய்யப்படாமல் இயற்கையானதாக உள்ளது. அவர்கள் நெடுந்தூரத்தைக் கடந்து விளங்குகின்ற குற்றம் தீர்ந்த நிறமுடையவர்கள்.   அவர்கள் தங்களுடைய நெய்பூசப்பெற்ற ஈரமான கூந்தலில் சிவந்த காம்பையுடைய வெட்சி மலரின் சிறிய இதழ்களை இடையே வைத்து, பசிய தண்டையுடைய குவளைமலரின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு, சீதேவி என்னும் தலைக்கோலத்தோடு வலம்புரி என்னும் தலைக்கோலத்தையும் பக்கத்தில் வைத்திருப்பர்; தங்கள் திலகம் அணிந்த மணங்கமழும் நெற்றியில் மகரவாய் என்னும் அணிகலன் அணிந்திருப்பர்; குற்றமற்ற கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பக மலரைச் செருகி, கரிய புற இதழையுடைய மருதப் பூங்கொத்துக்களை  வைத்திருப்பர்; கிளையிலிருந்து பிரிந்து எழுந்து நீரின்கீழ் உள்ள சிவந்த அரும்பை இணைத்துக் கட்டிய மாலையைக் கொண்டையில் வளையமாகச் சுற்றியிருப்பர்.

அந்தத் தெய்வ மகளிர், தங்கள் இரு காதுகளிலும் அசோகந் தளிரைச் செருகுவார்கள்; அவை அணிகலன்கள் அணிந்த அவர்கள் மார்பில் கிடந்து அசையும். இவ்வாறு தம்மை அழகு செய்துகொண்ட தெய்வமகளிர் கோங்கமரத்தின் குவிந்த அரும்பைப் போன்ற   தமது இளமுலைகளின்மேல் சந்தனக் குழம்பைப் பூசியிருப்பர்; அதன்மேல் வேங்கை மலரின் தாதையும் அப்பி, விளாமரத்தின் சிறிய தளிர்களைக் கிள்ளி மேலே தூவிக்கொள்வர். இவ்வாறு ஒப்பனை செய்துகொண்ட தெய்வமகளிர் பலரும் கூடி, ‘கோழி உயர்ந்து தோன்றும் வெற்றிக்கொடி நெடிது வாழ்கஎன்று வாழ்த்தி, மலை இடங்கள் எல்லாம் எதிரொலி செய்யும்படி அங்குள்ள சோலையில் ஆடுவார்கள்.

செங்காந்தள் மாலை சூடிய முருகன்

அந்தச் சோலையில், குரங்குகளும் ஏற முடியாத அளவுக்கு மரங்கள் செறிந்திருக்கும் சூழலில், நெருப்புப் போன்ற செங்காந்தள் மலர்களாலாகிய மாலையை அணிந்த தலையை உடைவன் முருகன்.

முருகன் சூரனைக் கொல்லுதல்

பாறைகள் மிகுந்த குளிர்ந்த கடல் கலங்குமாறு உள்ளே புகுந்து, சூரபத்மனை அழித்த ஒளிவிடுகின்ற இலை வடிவில் உள்ள நெடிய வேலை உடையவன் முருகன்.

அச்சத்தை உண்டாக்கும் பேய்மகளிரின் இயற்கை

பேய்மகளின்  கூந்தல் உலர்ந்திருக்கிறது. அவள் பற்கள் வரிசையாக இல்லை; பெரிய வாயை உடையவள்சுழலும் விழிகளையுடைய பசிய கண்களும் கொடிய பார்வையும், உடையவள்பிதுங்கிய கண்களையுடைய கோட்டானோடு, கொடிய பாம்பும் அவள் காதுகளில் தொங்குவதால், அவள் காதுகள் நீண்டுஅவளுடைய பெரிய முலைகளை மோதுகின்றன. அவள் சொரசொரப்பான வயிற்றையும், அச்சம் பொருந்திய நடையையும் உடைய , அச்சத்தை உண்டாக்கும் இயல்புடையவளாக இருக்கிறாள்.

முருகன் சூரபத்மனை அழித்தல்

அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தியபொழுது, அசுரர்களின் தலைவனாகிய சூரபத்மன் குதிரையும் மனிதனும் ஆகிய இரண்டு பெரிய உருவம் இணைந்தவனாக இருந்தான். அவன் ஒரு மாமரமாக மாறிக் கடலுக்குள் புகுந்தான். அப்பொழுது, அந்த மரம் தலைகீழாக நின்றது. பழம், காய், கொம்பு  எல்லாம் கீழாகவும் வேர் மேலாகவும் இருந்ததுமுருகன் தன்னுடைய வேலால் அந்த மாமரத்தைப் பிளந்து இரு கூறாக்கி சூரபத்மனை அழித்தான். அப்பொழுது, பேய்மகள் தன் இரத்தம் தோய்ந்த கூர்மையான நகங்களையுடைய வளைந்த விரல்களால் அசுரர்களின் பிணங்களின் கண்களைத் தோண்டி உண்டு, மிக்க நாற்றத்தையுடைய அந்தப் பிணங்களின் கரிய தலைகளை ஒளிபொருந்திய வளையை அணிந்த தன் பெரிய கையில் ஏந்திகொண்டிருக்கிறாள்; கண்டோர் அஞ்சுபடியாக, (முருகன்)போரில்  அசுரர்களை வென்று வெற்றிபெற்ற போர்க்களத்தைப் பாடுகிறாள்; தோளை அசைத்து, நிணத்தைத் தின்கின்ற வாயோடு துணங்கைக் கூத்து ஆடுகிறாள்.

திருப்பரங்குன்றம்

முருகனின் திருவடிக்குச்  செல்லுதற்குரிய  பெருமைகொண்ட உள்ளத்துடன், நன்மையை விரும்புகின்ற கொள்கையோடு, இதுவரை இருந்த இடத்தை (இவ்வுலகத்தை) விட்டுப் பிரிந்து சென்று வாழ்வதற்குரிய பயணத்தை நீ விரும்பினால், பல பிறப்புகளிலும், உன்னுடைய நல்ல நெஞ்சத்தில் உள்ள இனிய விருப்பம் (வீடுபேற்றின்கண் விருப்பம்) நிறைவேறும்படி, நீ கருதிய வினையின் பயனை இப்பொழுதே நீ பெறுவாய். முருகன் எங்கு உள்ளான் என்று நீ கேட்பாயாயின், அதனை நான் கூறுவேன் கேட்பாயாக.

மதுரை நகரின் கோபுர வாயிலில் நூலால் வரிந்து புனையப்பட்ட பந்துடன் பொம்மைகளும் அறுப்பாரின்றித் தொங்குகின்றன. மதுரையில் திருமகள் வீற்றிருக்கும் குற்றம் இல்லாத கடைத்தெருக்களும் மாடங்களும்  மிகுந்திருக்கின்றன. மதுரையில் மற்ற தெருக்களும் உள்ளன. மதுரையின் மேற்றிசையில், கரிய சேற்றினையுடைய அகன்ற வயல்களில் தாமரைப் பூவில் அழகிய சிறகுகளையுடைய வண்டுக்கூட்டங்கள் இரவில் உறங்கும். அந்த வண்டுகள் விடியற்காலத்தில் தேன் மணக்கும் நெய்தல் பூக்களை ஊதும். ஞாயிறு தோன்றியபின் சுனையில் உள்ள மலர்களில் இருந்து வண்டுகள் ஆரவாரிக்கும். இத்தகைய அழகிய இடத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளியிருக்கிறான்.

திருச்சீரலைவாய்

முருகன் ஏறிவரும் யானையின் நெற்றியில் கூரிய அங்குசம் குத்தியதால் ஏற்பட்ட தழும்புகள் வரிகளாகத் தோற்றம் அளிக்கும். அதன் நெற்றியில் பொன்னரிமாலையும் நெற்றிப்பட்டமும் கிடந்து அசையும். யானையின் இருபக்கங்களிலும் மணிகள் மாறிமாறி ஒலிக்கும். அந்த யானை வேகமான நடையும், பிறரால் தடுத்தற்கரிய கூற்றுவனை ஒத்த வலிமையும் உடையதுகாற்று எழுந்ததைப் போன்ற வேகத்தையுடைய அந்த யானைமீது முருகன் எழுந்தருளுவான்.

முருகனின் ஆறுமுகங்களும் பன்னிரு கைகளும்

முருகனின்  ஒருமுகம் பெரிய இருள் சூழ்ந்த உலகம் குற்றமின்றி விளங்கிப் பல ஒளிக்கீற்றுகளைப் பரப்பும். ஒரு முகம் பக்தர்கள் போற்றிப் புகழ, முகனமர்ந்து இனிதாகச் சென்று, விருப்பத்தோடு மகிழ்ந்து அவர்களுக்கு வரம் கொடுக்கும். ஒரு முகம்  மந்திர நியதிகளின் மரபுகளிலிருந்து  வழுவாத அந்தணருடைய வேள்விகளைக் கூர்ந்து கேட்கும். ஒரு முகம் மற்றவர்களால் விளக்க முடியாமல் எஞ்சிய பொருள்களைப் பக்தர்கள் இன்பம் அடையும்படி ஆராய்ந்து, திங்கள் போலத் துறைகளெல்லாம் விளங்கும்படி செய்யும். ஒருமுகம் போர் செய்யும் பகைவர்களை அழித்து, வருகிற போர்களை ஒழித்து, சினம் கொண்ட நெஞ்சத்தோடு  போர்க்களவேள்வியைச் செய்யும். ஒரு முகம், குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும், மடப்பத்தையும் உடைய, வள்ளியோடு மகிழ்ந்து  தங்குவதை விரும்பும். அவ்வாறு, அந்த ஆறு முகங்களும் தாம் செய்ய வேண்டிய செயல்களை முறையே செய்யும்.

முருகனின் மார்பிலிருந்து தோளளவும் உத்தம இலக்கணமாகிய மூன்று ரேகைகள் நீண்டு கிடக்கும்அவனது வலிய தோள்கள் பகைவர்மேல் வேலை எறிந்து அவர்களின் மார்பைப் பிளந்து அந்த வேலைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் பெருமையுடையவை.

அவனுடைய ஒரு கை ஆகாயத்தில் இயங்குகின்ற முனிவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு உயர்த்தப்பட்டிருக்கும். ஒரு கை இடுப்பில் வைக்கப்பட்டிருக்கும். ஒரு கை அழகிய செந்நிறமான ஆடயையுடைய துடையின் மேல் இருக்கும். ஒரு கை அங்குசத்தைச் செலுத்தும். இரண்டு கைகள்  அழகிய பெரிய கேடயத்தையும் வேலையும் வலமாகச் சுழற்றும்ஒரு கை முனிவர்களுக்குத் தத்துவங்களைக் கூறி, மற்ற நூல்களில் இல்லாத பொருளை உணத்தும் காலத்து மார்போடு விளங்கும். ஒரு கை மார்பில் தாழ்ந்த மாலையைத் திருத்தும். ஒரு கை கீழே நழுவி விழும் வளையோடு சுழலும். ஒரு கை இனிய ஓசை ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கும். ஒரு கை நீல வானத்திலிருந்து மிக்க துளிகளாக மழையைப் பொழியும்ஒருகை இந்திரன் மகளாகிய தெய்வயானைக்கு மணமாலை சூட்டும், இவ்வாறு பன்னிரு கைகளும் ஆறு முகங்களுக்குப் பொருந்தும் வகையில் தொழில் புரியும்.

திருச்சீரலையில் முருகன் எழுந்தருளும் தோற்றம்
வானத்தில் பல இசைக்கருவிகள் ஒலிக்கும்ஊதுகொம்பும் வெண்சங்கும் இசைக்கருவிகளும் முழங்கும். இடியைப் போன்ற ஓசையுடைய முரசு அதிரும். பல புள்ளிகள் உள்ள இறகுகளுடைய மயில் வெற்றிக்கொடியிலிருந்து ஒலிக்கும். இவ்வகையான பல ஆரவாரங்களுடன், வானத்தின் வழியாக விரைந்து செல்வதை உள்ளத்தில் கொண்டு, உலக மக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழையுடைய  திருச்செந்தூர் என்னும் ஊருக்குச் சென்று தங்குவது முருகனுடைய பண்பாகும்

திருவாவினன்குடி

முருகனைக் காண விண்ணுலகில் இருந்து பலரும் செல்கிறார்கள். அவர்களுள் முனிவர்களும் செல்கிறார்கள். அந்த முனிவர்கள் மரவுரியை உடையாக அணிந்திருக்கிறார்கள்; அழகான வலம்புரிச்சங்கை ஒத்த வெண்மையான நரைமுடி உடையவர்கள்;

மாசில்லாமல் விளங்கும் மேனியை உடையவர்கள்; மான்தோல் போர்த்திய, தசை கெட்ட மார்பில் எலும்புகள் தோன்றி உலவும் உடம்பினையுடையவர்கள்; பல நாட்கள் உணவை உண்ணாது தவிர்த்தவர்கள்; பகையையும் சினத்தையும் தம் மனத்திலிருந்து நீக்கியவர்கள்; பலவற்றையும் கற்றவர்களும் அறியாத அறிவினையுடைய -வர்கள்; கற்றவர்களுக்குத் தாம் எல்லையாக நிற்கும்  தலைமையை உடையவர்கள்; காமத்தோடு சினத்தையும் விலக்கிய அறிவுடையவர்கள்; துன்பத்தை சிறிதளவும் அறியாத இயல்புடையவர்கள்; வெறுப்பில்லாத அறிவுடைய -வர்கள். இத்தகைய இயல்புடைய முனிவர்கள்  முன்னே செல்கிறார்கள்.
முருகனைக் காண, முனிவர்களைத் தொடர்ந்து கந்தருவர்களும்வருகிறார்கள். கந்தருவர்கள் விண்ணுலகத்தில் வசிப்பவர்கள்; யாழைப் பயன்படுத்திப் பாடுவதில் வல்லவர்கள். அவர்கள் புகையை முகந்தாற் போன்ற அழுக்கு இல்லாத தூய உடையை அணிந்திருக்கிறார்கள்; மொட்டுகள் வாய் அவிழ்ந்து மலர்ந்த மாலை சூழ விளங்கும்  மார்பை உடையவர்கள்; காதிலே வைத்துப் பார்த்துச் சுருதி கூட்டிய நரம்புக் கட்டையுடைய,நல்ல யாழின் இசையில் பயிற்சியுடையவர்கள்நன்மையுடைய நெஞ்சையும்

மென்மையான  மொழிகளையும் உடையவர்கள். அவர்கள் இனிய யாழ் நரம்பை மீட்டிப் பாடுகிறார்கள்.

கந்தருவரோடு கந்தருவ மகளிரும் வருகிறார்கள். அவர்கள் இசை நாட்டியம் ஆகிய கலைகளில் வல்லவர்கள்; நோய் இல்லாத உடம்பையுடையவர்கள்; மாமரத்தின் ஒளிரும் தளிரை ஒத்த நிறத்தையும், பொன்னை உரைத்தாற்போலத் தோன்றும் அழகிய  தேமலை உடையவர்கள்; இனிய ஒளியோடு விளங்கும் பதினெட்டு வடங்களைக் கொண்ட மேகலையை தங்கள் இடுப்பில் அணிந்திருக்கிறார்கள்; யாழினை மீட்டிப் பாடிவந்த கந்தருவருடன் இணைந்து குற்றமில்லாமல் பாடுகிறார்கள்

  

வெண்மையான நச்சுப் பற்களையும், நெருப்பைப் போன்ற மூச்சையுமுடைய பாம்புகளை அடித்துக் கொல்லும், பல கோடுகளையுடைய வளைந்த சிறகுகளையுடைய கருடனைத் தம் கொடியிலே கொண்ட திருமாலும் முருகனைக் காண வருகிறார்.
வெண்ணிறமான காளையின் உருவம் பொறித்த கொடியைத் தம் வலப்பக்கத்தில் உயர்த்தியவரும் பலரும் புகழும் திண்மையான தோள்களையும் பார்வதியைத் தம் உடலில் இடப்பக்கத்தில் உடையவரும், இமையாத மூன்று கண்களை உடையவரும் மூன்று மதில்களை எரித்து அழித்தவருமாகிய சிவபெருமானும் முருகனைக் காண வருகிறார். முருகனைக் காண இந்திரனும் வருகிறான். அவன் ஆயிரம் கண்களையுடையவன்; நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்து முடித்தவன்; பகைவர்களை அழித்து வெற்றி பெற்றவன். மிகுந்த செல்வத்தையுடைய அந்த இந்திரன் நான்கு உயர்ந்த கொம்புகளை உடைய புகழ்பெற்ற ஐராவதம் என்னும் யானையின் கழுத்தின் மேல் ஏறி வருகிறான்,

இத்தேவர்கள் முருகனைக் காணவருவதற்கான காரணம்

பிரமனின் அகந்தையை அடக்குவதற்காக முருகன் பிரமனைச் சிறையில் அடைத்தான். பிரமன் உலகில் உள்ள உயிர்களைப் படைக்கும் தொழில் புரிபவன். அவன் சிறையில் இருப்பதால், அவனால் படைக்கும் தொழிலைச் செய்ய முடியவில்லை. படைத்தல் இல்லாததால் காத்தல் தொழிலைச் செய்யும் திருமாலும், அழித்தலைச் செய்யும் சிவனும் தங்கள் தொழில்களைச் செய்ய  இயலவில்லை. ஆகவே, பிரமனைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு முருகனை வேண்டுவதற்காக, முனிவர்கள், கந்தருவர்கள், திருமால், சிவன், இந்திரன் ஆகியோர் திருவாவினன்குடியில் எழுந்தருளியிருக்கும் முருகனைக் காண வருகிறார்கள்.

திருவேரகம்

அந்தணர்கள் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்களைத் தவறாமல் செய்பவர்கள். அவர்களுடைய பெற்றோர்கள் தனித்தனியே இரண்டு முனிவர்களின் பெயர்களையுடைய  கோத்திரத்தில் (குலத்தில்) பிறந்தவர்கள். அவர்கள் நாற்பத்தெட்டு ஆண்டுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பார்கள் (பிரமசரியத்தைக் கடைப்பிடிப்பார்கள்); ஆகவனியம், தக்கிணாக்கினி, காருகாபத்தியம் என்னும் மூன்று வகையான தீயால் உண்டாகிய செல்வத்தை உடையவர்கள்; பூணூல் அணிவதற்குமுன் ஒரு பிறப்பும், பூணூல் அணிந்தபின் மற்றொரு பிறப்பும் ஆகிய இருபிறப்பாளர் என்று கருதப்படுகிறார்கள்; காலம் அறிந்து தோத்திரங்களைக் கூறுவர்மூன்றுமுறை முறுக்கிய ஒன்பது நூலாலாகிய பூணூலை அணிந்திருப்பார்கள்; ஈரமான உடையை  இடுப்பில் உடுத்தி, தலைமேல் கைகளை உயர்த்தி, முருகனைப் புகழ்ந்து, ’நமோ குமராயாஎன்னும் மந்திரத்தைப் பலமுறை கூறி, மணம் மிக்க நறுமலர்களை ஏந்தி முருகனை வழிபடுவார்கள். அவர்கள் வழிபடுவதைக் கண்டு மனம் மகிழ்ந்து திருவேரகம் என்னும் ஊரில் முருகன் தங்கியிருப்பான்.

குன்றுதோறாடல்

குன்றுகள்தோறும் முருகன் எழுந்தருளியிருக்கிறான். அக்குன்றுகளில் உள்ள முருகன் கோயில் பூசாரிபச்சிலைக்கொடியில்  நறுமணமுள்ள சாதிக்காயை நடுவிலே வைத்து, அழகிய தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன் வெண்ணிறமான கூதாளம் மலரையும் வைத்துக் கட்டிய கண்ணியை அணிந்திருப்பான். கொடிய செயலையும் வலிய வில்லையும் உடைய கொலைத்தொழில் புரியும் வேடர்கள், தங்கள் மார்பில் நல்ல மணம் வீசும் சந்தனத்தைப் பூசிக்கொண்டு, நெடிய மூங்கிலிலிருந்து முற்றின தேனால் செய்த கள்ளின் தெளிவை மலையிலுள்ள சிற்றூர்களில் வாழும் தம் சுற்றத்தாரோடு உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்ற சிறிய பறைக்கு ஏற்றபடி  குரவைக்கூத்து ஆடுவர். குறிஞ்சி நிலத்து மகளிர், விரலால் வலிய மலர்த்துவதால் மலர்ந்தவை, வெவ்வேறு வகையாக இருப்பவை, மணமுள்ள  காம்போடு ஆழமான சுனைகளில் மலர்ந்தவை, வண்டுகள் படிந்து மொய்க்கும் தன்மையவை ஆகிய மலர்களால் தொடுத்த கண்ணியை அணிந்திருக்கிறார்கள்; இரட்டையாகக் கட்டிய மாலையைக் கூந்தலில் அணிந்திருக்கிறார்கள்; கஞ்சாவின் இலையை- யுடைய மணமுள்ள பூவையும், சிவந்த அடியையுடைய வெண்கடம்பின் வெண்மையான பூங்கொத்துகளையும் இடையிடையே இட்டு, வண்டுகள் வந்து மொய்த்துத் தாதுகளை உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த தழை என்னும் ஆடையை அணிந்திருக்கிறார்கள்; பல மணிகளாலான வடங்களையுடைய மேகலையை இடுப்பில் அசையும்படி உடுத்திக்கொண்டு, மயில் போன்ற மென்மையாக நடந்து வருகிறார்கள்.

அங்கே முருகன் வருகிறான். அவன் சிவந்த மேனியன்சிவந்த ஆடை அணிந்தவன்; சிவந்த அடிமரத்தையுடைய அசோகின் குளிர்ந்த தளிர்கள் அசைகின்ற காதுகளை உடையவன்; கச்சை கட்டியவன், வீரக்கழல் அணிந்தவன்; வெட்சிமாலை சூடியவன்; புல்லாங்குழல் வாசிப்பவன்; கொம்பு  ஊதுகிறவன்; சிறிய பல இசைக்கருவிகளை இசைப்பவன்; ஆட்டின்மேல் ஏறுபவன்; மயில்மேல் ஊர்பவன்குற்றமற்ற  சேவற்கொடியை ஏந்தியவன்; நெடிய உருவமுடையவன்; தொடியை அணிந்த தோள்களையுடையவன்; சிறிய புள்ளிகளும், மணமும், குளிர்ச்சியும், மென்மையும் உடைய ஆடையை இடுப்பில் கட்டியவன். அவன் தன் மத்தளம் போன்ற பெரிய  கைகளில் மகளிர் கையைத் தாங்கி, மெல்லிய தோளையுடைய பெண்மான் போன்ற பல மகளிரைத் தழுவி, அவர்களுக்கு முதற்கை கொடுத்து மலைகள்தோறும் சென்று திருவிளையாடல் புரியும் இயல்புடையவன்.      

பழமுதிர் சோலை

சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து, ஆட்டை  அறுத்துக், கோழிக்கொடியை நட்டு, விழாவிற்குரிய இடத்தை நிறுவி, ஊர்கள்தோறும் நடைபெரும் சிறப்புப் பொருந்திய விழாக்களிலும்,பக்தர்கள் துதிப்பதிற்குச் செல்லும் இடங்களிலும், வேலன் அமைத்த வெறியாடுகின்ற இடங்களிலும், காடுகளிலும், சோலைகளிலும், ஆற்றுக்கு நடுவில் உள்ள இடங்களிலும், ஆறுகளிலும், குளங்களிலும், வேறு பல இடங்களிலும், நாற்சந்தியிலும், முச்சந்தியிலும், புதிய பூக்களையுடைய கடம்ப மரத்திலும்மரத்தடியிலுள்ள மன்றங்களிலும், பொதுவாகப் பலர் கூடும் இடங்களிலும், தெய்வமாக மக்கள் வழிபடும் கம்பங்களிலும் முருகன் எழுந்தருளியிருப்பான்.

முருகனை வழிபடும் இடத்தில், குறமகள் மாட்சிமைப்பட்ட தலையையுடைய கோழிக்கொடியோடு மற்ற அலங்காரங் -களயும்  பொருத்தமாகச் செய்வார்கள்; தெய்வம் இருக்கும் என்று அவர்கள் நினைக்கும் இடங்களில்  நெய்யோடு வெண்சிறுகடுகையும் அரைத்துப் பூசி, மந்திரத்தை உரைப்பார்கள்; கை கூப்பி வணங்கி வளமான மலர்களைத் தூவுவார்கள்; ஒன்றோடு ஒன்று மாறுபட்ட நிறத்தையுடைய இரண்டு ஆடைகளை ஒன்றாகச் சேர்த்து உடுத்திக்கொண்டு, சிவந்த நூலைக் காப்பாகக் கட்டிக் கொள்வார்கள்; வெண்மையான பொரியைத் தூவி, மிகுந்த வலிமையுடைய கொழுத்த  ஆட்டுக்கிடாயை வெட்டியதால் தோன்றிய உதிரத்தோடு (இரத்தத்தோடு) பிசைந்த தூய வெள்ளரிசியைச் சிறு பலியாக இட்டு, பல நிவேதனப் பொருள்கள் நிரம்பிய கூடைகளை  வைத்து, சிறிய பசுமஞ்சளோடு மணமுள்ள பொருள்களைத் தெளிப்பார்கள்செவ்வலரியாலான மணம் மிக்க  குளிர்ந்த  மாலையை ஒரே அளவாக இருக்கும்படி அறுத்து, அங்கங்கே  தொங்கவிடுவார்கள்;  மலைச்சாரலில் உள்ள நல்ல ஊர்களைப் பசியும் பிணியும் நீங்க வாழ்த்துவார்கள். குறமகள் மணமுள்ள புகையைக் காட்டி, குறிஞ்சிப்பண்ணைப் பாடுவாள்; இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, பல நிறங்களையுடைய பூக்களைத்  தூவி, காண்பவர்களுக்கு அச்சம் வரும்படிகுருதி கலந்த  சிவந்த தினையைப் பரப்பி, முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக, முருகன் வரும்படி செய்த அழகு மிகுந்த நகரில், வெறியாடுகளம் ஆரவாரிக்கும்படி பாடுவாள். பல கொம்புகளை ஊதி, வளைவுடைய மணியை ஒலித்து, பின்வாங்கி ஓடாத வீரத்தையுடைய பிணிமுகம் என்னும் யானையை  வாழ்த்துவாள். இவ்வாறு குறமகள் வெறியாடும் களங்களில்,   தன்னை விரும்பும் அன்பர்கள் விரும்பியபடியே விரும்பியவற்றைப் பெற்று, வழிபடுவதற்கு முருகன் எழுந்தருளியிருக்கிறான். அங்கு மட்டுமல்லாமல் அன்பர்கள் வழிபடும் இடங்களிலெல்லாம்  முருகன் எழுந்தருளியிருக்கிறான். அன்பர்கள் வழிபடும் இடங்களில் எல்லாம் முருகன் எழுந்தருளிருந்தாலும், வேறு எங்காவது நீ முருகனைக் கண்டால், அந்த இடத்தில், முகம் மலர்ந்து, அவனைப் போற்றித் துதித்து, கையால் தொழுது, அவன் காலடியில் விழுந்து வணங்குவாயாக.

முருகன் காட்சி அளித்து அருள் வழங்கும் தோற்றம்

நெடிய பெரிய இமயமலையில் தருப்பைப்புல் வளர்ந்த நீல நிறமான பசிய சுனையில் விண், மண், நீர், தீ, காற்று ஆகிய ஐந்து பூதங்களில் ஒருவனாகிய தீ தன் உள்ளங்கையில் ஏற்றுச் சென்று ஆறு கார்த்திகை மாதர் பெற்ற ஆறாகத் தங்கிய செல்வனே!                             

கல்லாலமரத்தின் கீழிருந்த சிவபெருமானுடைய மகனே! பெருமையையுடைய பக்ககங்களையுடைய இமயமலையின் மகளாகிய பார்வதியின் புதல்வனே! பகைவருக்கு எமனைப் போன்றவனே! வெற்றியையும் வெல்லும் போரையும் உடைய கொற்றவையின் மகனே! அணிகலன்களை அணிந்த சிறப்புடைய பழையவளாகிய பராசக்தியின் குழந்தையே! தேவர்கள் வணங்கிய வில்லை ஏந்திய படைத்தலைவனேமாலையணிந்த மார்பையுடையவனே! எல்லா நூல்களையும்  அறிந்த புலவனே! போரில் ஒப்பு இல்லாதபடி நிற்பவனே! போரில் வெற்றியுடைய வீரனே! அந்தணர்களின் செல்வமாயிருப்பவனே, சான்றோர் புகழும் சொற்களின் கூட்டமாயிருப்பவனே! மகளிர் விரும்பும் கணவனே! வலிமையுடையவர்களுள் சிங்கம் போன்றவனே! வேல் பொருந்திய பெரிய கைகளால் அமைந்த பெரிய செல்வத்தை உடையவனே! கிரவுஞ்சமலையை அழித்த  குறையாத வெற்றியையுடைய, விண்ணைத் தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையவனே! பலரும் புகழ்கின்ற சொல்லும் நல்ல மொழிகளுக்கு உரியவர்களாகிய புலவர்களுக்கு ஆண் சிங்கம் போன்றவனே! பெறுவதற்கரிய  முறைமையினையுடைய பெரிய பெயராகிய முருகன் என்னும் பெயரையுடையவனே! தன்னிடம் விரும்பி வந்தவர்களுக்கு அவர் விரும்பியதை அளிக்கும் பெரிய புகழை  உடையோனே! இடுக்கண்பட்டோர்க்கு அருள்செய்யும், பொன்னாலான அணிகலன்களை அணிந்த சிவந்த மேனியை உடையவனே! நெருங்கி வரும் போர்களை எதிர்த்து நின்று, வென்று அழிக்கின்ற உன்னுடைய மார்பினால், இரந்து வந்தவர்களைப் பாதுகாக்கும் அழகுடைய நெடிய வேளே! பெரியோர் புகழ்கின்ற பெரிய பெயரையுடைய கடவுளே! சூரபத்மனின் குலத்தை அடியோடு அழித்த மிக்க வலிமை பெற்றவனே! போரில் சிறந்து விளங்கும் வீரனே! தலைவனே!’ என்று பலவற்றையும் நான் அறிந்தவற்றை விடாமல் சொல்லிப் புகழ்ந்து, அமையாமல்,‘உன்னை அளந்து அறிவது உலகில் நிலைபெற்ற உயிர்களுக்கு அருமையாதலால்உன் திருவடியை நினைத்து வந்தேன், உன்னோடு ஒப்பார் இல்லாத ஞானமுடையவனே’, என நீ சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிப்பதற்கு முன்னரே, அப்பொழுதே, வேறுவேறாகிய பல வடிவினையுடைய குறிய பல ஏவலாளர்கள் விழா நடத்தும் இடத்தில் சிறப்புண்டாகும்படியாகத் தோன்றி,  ’இவன் இரங்கத் தக்கவன் ; அறிவு வாய்ந்த இரவலன், வந்துளன் பெருமானே, ஈகையால் வந்த உன் புகழை விரும்பிஎன  இனியனவும் நல்லனவும் ஆகிய பலவற்றைக்கூறி  வாழ்த்துவர்.

முருகன் அருள் புரிதல்

தெய்வத்தன்மை அமைந்த வலிமை விளங்கும் உருவத்தையும் வானத்தைத் தொடும் அளவுக்கு உயரத்தையும் உடைய முருகன் உனக்கு முன்னர் எழுந்தருளி, அச்சத்தைத் தரும்  உயர்ந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக்கொண்டு, மிகப் பழையதாகிய தன் அழகான திருவுருவத்தைக் காட்டுவான். ’அஞ்சுவதை விட்டுவிடு, உன் வரவை முன்பே அறிவேன்என்று அன்புடைய நல்ல மொழிகளைச் சொல்லி, இருளின் நிறத்தையுடைய கடல் வளைந்து சூழந்த உலகத்தில்அழிவு இல்லாமல், நீ ஒருவனே தலைவனாகத் தோன்றும்படி, பெறுதற்கரிய பரிசிலான வீடுபேற்றினைத் தந்தருளுவான்.   

பழமுதிர்சோலை மலையின் அருவி

பழமுதிர்  சோலையிலுள்ள மலைகளிலிருந்து பல அருவிகள் ஆரவாரத்தோடு  வருவது துணிக்கொடிகள் அசைவதைப்போல் இருக்கும். அந்த அருவிகள் அகில் மரங்களைச் சுமந்துகொண்டு, சந்தன மரத்தின் அடிப்பாகத்தை உருட்டிக்கொண்டு வரும்சிறு மூங்கிலின் பூவையுடைய அசைகின்ற கொம்பு, பூ இல்லாமல் மொட்டையாகும்படி, அதன் வேரைப் பிளந்துகொண்டு வரும்; தேன்கூடுகளைக் கெடுத்துப் பலாச்சுளைகளை வாரிக்கொண்டு, சுரபுன்னை மலர்களை உதிர்த்துப் பெண் குரங்கையும் ஆண் குரங்கையும் நடுங்கச் செய்யும்; பெண்யானைகள் குளிரால் நடுங்கும்படி நீரை வீசி, பெரிய ஆண் யானைகளின் முத்தையுடைய வெண்மையான தந்தங்களை வாரிக்கொண்டு, குதித்து, நல்ல பொன்னும் மணியும் தம் நிறம் நன்றாக ஒளிரும்படி செய்து, பொன்னைக் கொழித்துக்கொண்டு, வாழையின் அடிமரம் முறியவும், தென்னையின் இளநீர்க் குலைகள் உதிரவும் மோதும்; மிளகுக் கொடியின் கரிய கொத்துகளைச் சாய்த்து, மயில்களும், பெட்டைக் கோழிகளும், பயந்து ஓடச் செய்து,   பன்றிகளும் கரடிகளும் மலைக் குகைகளில் நுழையவும்கொம்புடைய காட்டுமாடுகள் முழங்கவும் செய்து ஆரவாரிக்கும். இவ்வகை அருவிகள் உள்ள பழமுதிர் சோலையில் முருகன் எழுந்தருளியிருப்பான்.

 


Comments

Popular posts from this blog

திருமுருகாற்றுப்படை - அறிமுகம்