திருமுருகாற்றுப்படை - அறிமுகம்

 திருமுருகாற்றுப்படைஅறிமுகம்

 

தமிழ் மொழியின் தொன்மை

இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.

 

சங்க இலக்கியம்

சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, மூன்று முதல் 140 அடிகளுடைய பாடல்களில் சிறந்தவற்றைஎட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். அந்த எட்டு நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு. எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்தொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன.

 

பத்துப்பாட்டு

கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

பத்துப்பாட்டில் உள்ள நூல்கள்:

1.      திருமுருகாற்றுப்படை,

2.      பொருநராற்றுப்படை,

3.      சிறுபாணாற்றுப்படை,

4.      பெரும்பாணாற்றுப்படை,

5.      முல்லைப்பாட்டு,

6.      மதுரைக் காஞ்சி,

7.      நெடுநெல்வாடை,

8.      குறிஞ்சிப்பாட்டு,

9.      பட்டினப்பாலை,

10.  மலைபடுகடாம்.  

இவற்றுள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை[2] என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக்காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை.

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை என்பது முருகக் கடவுளின் அருளைப் பெற்ற ஒருவன் அந்த அருளைப் பெற விரும்பும் ஒருவனை முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்கு ஆற்றுப்படுத்துவதாக நக்கீரர் என்னும் புலவர் இயற்றிய 317 அகவற்பா அடிகளைக் கொண்ட பாட்டு. இந்தப் பாட்டு புலவராற்றுப்படை என்றும் அழைக்கப்படுகிறது, இந்தப் பாட்டு ஆறு பிரிவுகளை உடையது. முதற்பிரிவில் திருபரங்குன்றம் என்னும் மலைக்கோயில் பற்றியும், அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனது திருவுருவச் சிறப்பு, அப்பெருமான் அணியும் மாலைகள், தெய்வ மகளிரின் செயல்கள், சூரபத்மன் என்னும் அசுரனை முருகன் அழித்தல், மதுரையின் சிறப்பு, திருப்பரங்குன்றத்தின் இயற்கை வளம் ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் மதுரைக்குத் தென்மேற்கில் ஏறத்தாழ ஐந்து கல் தொலைவில் உள்ளது. அசுரர்களை அழித்துத் தேவர்களைக் காத்த முருகப் பெருமானுக்குத் தனது மகளான தெய்வயானையை இந்திரன் திருமணம் செய்வித்த தலம் திருப்பரங்குன்றம் என்று புராணக் கதைகள் கூறுகின்றன.

 

இரண்டம் பிரிவில் முருகனது யானையின் இயல்பு, அவனுடைய ஆறுமுகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகள் ஆகியவற்றின் செயல்கள், அவன் திருச்சீரலைவாய் என்னும் ஊரில் எழுந்தருளியிருத்தல் ஆகியவை கூறப்பட்டுள்ளன. திருச்சீரலைவாய் இன்று திருச்செந்தூர் என்று அழைக்கபடுகிறது. இஃது இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. முருகன் சூரபத்மன் என்னும் அசுரனை அழித்த இடம் திருசெந்தூர் என்று கருதப்படுகிறது.

 

மூன்றாம் பிரிவில்  வழிபடும் முனிவர்களின் பெருமையும் திருவாவினன்குடியில் முருகன் எழுந்தருளியிருத்தல் ஆகியவையும் கூறப்பட்டுள்ளன. திருவாவினன்குடி இன்றுள்ள பழனி என்னும் ஊராகும். இவ்வூரில் மலையடிவாரத்தில் உள்ள கோயிலே திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகும்.

 

நான்காம் பிரிவில் திருவேரகம்  என்னும் இடத்தில் முருகனை வழிபடுவோரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. திருவேரகம் என்பது எந்த  ஊர் என்பதைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. திருமுருகாற்றுப்படைக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர். ‘மலை நாட்டகத்து ஒரு திருப்பதிஎன்று எழுதியுள்ளார். மலை நாடு என்பது மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்த நிலப்பகுதி ஆகும் என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் நாஞ்சில் நாட்டில் உள்ள குமர கோயில் என்ற இடமே திருவேரகம் என்று கூறுகின்றனர். ஆனால், அருணகிரிநாதர்(கி.பி. 1370 – 1450) காவிரிக்கரையில் உள்ள சுவாமிமலைதான் திருவேரகம் என்று தம் திருப்புகழ் பாடல்களில் குறிப்பிடுவதாக கி. வா. ஜகந்நாதன் கூறுகிறார்[3].

 

திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி மற்றும் திருவேரகம் ஆகிய நான்கு இடங்களில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பற்றிக் கூறிய பிறகு, திருமுருகாற்றுப்படையின் குன்றுதோறாடல் என்ற ஐந்தாம் பிரிவில் முருகன் குன்றுதோறும் ஆடல் புரிகின்றான் என்றும் ஆங்காங்கே வேலனும் குறமகளும் எவ்வாறு முருகனை வழிபடுகிறர்கள் என்றும் நக்கீரர்  கூறுகிறார். குன்றுதோறாடல் என்பது சென்னைக்கு மேற்கே ஏறத்தாழ 50 கல் தொலைவில் உள்ள திருத்தணி என்னும் ஊரைக் குறிப்பதாக பலரும் கருதினார்கள். அதனால், இன்றும் முருகனின் ஆறுபடைவீடுகளில் திருத்தணியும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

திருமுருகாற்றுப்படையின் ஆறாம் பிரிவில் நக்கீரர் பழமுதிர் சோலை என்னும் ஊரில் உள்ள மலையின் இயற்கை வளங்களை விளக்கமாகக் கூறி, அந்த மலைக்கு உரியவன் முருகன் என்று கூறுகிறார். பழமுதிர் சோலை என்பது இக்காலத்தில் அழகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது மதுரைக்கு வடக்கே 15 கல் தொலைவில் உள்ளது. இது முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

திருமுருகாற்றுப்படையின் காலம்

தொல்காப்பியர் ஆற்றுப்படை நூலுக்கு வகுக்கும் இலக்கணம் பின்வருமாறு:

            கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

          ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

          பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

          சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்.

   (தொல்காப்பியம், புறத்திணையியல்- 36)

அதாவது, கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகிய நால்வரையும் பொருளுதவி செய்யும் வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை என்று  ஆற்றுப்படை  நூலுக்குத் தொல்காப்பியர் இலக்கணம் வகுக்கிறார். திருமுருகாற்றுப்படையில் முருகன் அருள்பெற்ற ஒருவன் அருள்பெற விரும்பும் ஒருவனை முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்கு ஆற்றுப்படுத்துகிறான். நக்கீரர் இயற்றியுள்ள திருமுருகாற்றுப்படை தொல்காப்பியர் கூறும் இலக்கணத்தி -லிருந்து வேறுபடுகிறது. தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் இறைவன் அருள்பெற்ற ஒருவன் இறைவன் அருள்பெற விரும்பும் ஒருவனை இறைவனிடம் ஆற்றுப்படுத்துவது வழக்கில் இல்லை என்று தெரிகிறதுஆகவே, திருமுருகாற்றுப்படையின் காலம், தொல்காப்பியர் காலத்துக்குப் பிந்தியது என்பது புலகனாகிறது. திருமுருகாற்றுப்படையின் காலத்தை ஆய்வு செய்த மூதறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார்[4], ”திருமுருகாற்றுப்படை சங்க காலத்திற்குப் பின்பும் (கி. பி. 300க்குப் பின்பு) அப்பர் சம்பந்தர்க்கு முன்பும் (கி.பி. 600க்கு முன்பு) பாடப்பட்டிருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும்.” என்று தம் நூலில் குறிப்பிடுகிறார்.

 

திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர்

திருமுருகாற்றுப்படையை இயற்றிய புலவரின் பெயர் நக்கீரர் என்று கருதப்படுகிறது. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பவர் பத்துப்பாட்டில் உள்ள நெடுநல்வாடை என்னும் நூலை இயற்றியவர். நெடுநல்வாடை கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்பது டாக்டர் இராசமாணிக்கனாரின் முடிவு[5]. திருமுறுகாற்றுப்படையும் நெடுநல்வாடையும் வேறுவேறு காலத்தைச் சார்ந்த நூல்களாகையால், திருமுருகாற்றுப்படையை இயற்றிய நக்கீரர் வேறு நெடுநல்வாடையை இயற்றிய நக்கீரர் வேறு என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

 

திருமுருக்காற்றுப்படையின் சிறப்பு

சைவர்கள் பாராயணத்திற்குரிய நூல்களாகவும், வேதத்தைப் போன்றனவாகவும் போற்றிப் பாதுகாத்து வரும் நூல்கள் பன்னிரு சைவத் திருமுறைகள். அவற்றுள், பதினோறாம் திருமுறையில் உள்ள நூல்களில் திருமுருகாற்றுப்படையும் ஒன்று. இன்றும் சிவ பக்தர்கள் திருமுருகாற்றுப்படையை மனப்பாடம் செய்து நாள்தோறும் அதைப் பாடி முருகனை வணங்கி மகிழ்கிறார்கள்.

 



[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5

[2] வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

[3]. கி. வா. ஜகந்நாதன், திருமுருகாற்றுப்படை  விளக்கம், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை

[4]. பேரா. காவ்யா சண்முகசுந்தரம் (தொகுப்பாசிரியர்), சங்க இலக்கிய வரலாறுமா. ரா. களஞ்சியம் III, காவ்யா பதிப்பகம்

[5]. பேரா. காவ்யா சண்முகசுந்தரம் (தொகுப்பாசிரியர்), சங்க இலக்கிய வரலாறுமா. ரா. களஞ்சியம் III, காவ்யா பதிப்பகம்


Comments